போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு பெயர்களை நீக்குக! தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வேண்டுகோள்!

புதுச்சேரி விழுப்புரம்-ரெட்டியார் பாளையம் சாலையில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் முன்பு மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இயக்கத்தின் செயலாளர் கோ. அ. ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு கேரளா மற்றும் ஆந்திர என இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் வாக்குரிமை வைத்துள்ள போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், போலியாக இரு இடங்களில் பதிவு செய்த பெயர்களை நீக்கிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழர் களம், தமிழ் தேசிய முன்னணி, புதுவை தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ்த் தேசிய பேரியக்கம், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சங்கத்தினர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.