வனப்பகுதிகளில் பலத்த மழை -காட்டாறுகளில் வெள்ள பெருக்கு -பஸ் பாதியில் திரும்பி சென்றதால் மலை கிராம மக்கள் கடும் அவதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியான மாக்கம்பாளையம் மலை கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு செல்ல வேண்டுமெனில் குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம், ஆகிய 2காட்டாறுகளை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த இரண்டு காட்டாறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 1ஆண்டுக்கு மேலாக நடை பெற்று வருகிறது. இந்த பணியானது மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாக்கம் பாளையம், அரிகியம், வனப் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்ததால் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இந்த வழியாக சென்ற அரசு பஸ் முதல் பள்ளத்தை கடந்து, சக்கரை பள்ளம் வரை சென்றது. இரண்டாவது பள்ளத்தில் பஸ் இறங்கினால் சேற்றில் சிக்கி விடும் என பயணிகளை இறக்கி விட்டு திரும்பியது. வன விலங்குகள் நடமாடும் பகுதியில் உயிரை கையில் பிடித்து கொண்டு 12 கி. மீ., நடந்தே செல்லவேண்டிய கட்டாயத்திற்கு பொது மக்கள் தள்ளப் பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் வன பகுதியில் மழை பெய்தால் இரண்டு காட்டாறுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். மாக்கம் பாளையம் கிராமம் தனி தீவு போல் ஆகி விடும். வெள்ளம் வடிந்த பின்பே போக்கு வரத்து தொடங்கும் இது தான் வாடிக்கையாக உள்ளது.இந்த இரண்டு பாலம் கட்டி முடித்தால் தான் இந்த மக்களின் துயரம் தீரும்.