பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணிற்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு ரத்தம் உறைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பரபரப்பு

மருத்துவர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டதால் தனது மகள் உயிரிழந்ததாக கூறி பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான்கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட குண்டலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி ஜெயப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் ஜெயப்பிரியா இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு கடந்த 21ஆம் தேதி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அன்று இரவே அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பின்னர் ஜெயப்பிரியாவிற்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அப்போது அவருக்கு அதிகளவு ரத்தப்போக்கு வந்ததாகவும் இதனால் மேல் சிகிச்சைக்காக தேனி கானாவிளக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியதாகவும் இதனால் கடந்த 22 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் உறவினர்கள் ஜெயப்பிரியாவை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை திடீரென ஜெயப்பிரியா உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வாசலில் குவிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் மகள் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும் என்று கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி - மதுரை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அளித்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு மருத்துவமனைக்கு உள்ளே சென்றனர். இது குறித்து உயிரிழந்த ஜெயப்பிரியாவின் சகோதரி கூறிய போது பெரியகுளம் மருத்துவமனையில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் போது ரத்தம் அதிகம் எடுத்ததாகவும் இது குறித்து கேட்பதற்கு ரத்தம் உறைந்து விடுவதாக செவிலியர்கள் கூறியதாக தெரிவித்தார். மேலும் நாங்கள் உடன் இருந்தபோது ஜெயப்பிரியா தனது காலில் தாங்க முடியாத வலி ஏற்படுவதாகும் தெரிவித்தார் இது குறித்து செவிலியரிடம் தெரிவித்த போது அப்படித்தான் இருக்கும் காலில் ரத்தம் இறங்க நேரமாகும் அதனால் வலி இருக்கும் என்று அலட்சியமாக பதில் அளித்ததாக புகார் தெரிவித்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறினர் தொடர்ந்து அவரை நாங்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஜெயப்பிரியாவை சோதித்த மருத்துவர்கள் மிகவும் மோசமான நிலைமையில் அழைத்து வந்துள்ளீர்கள் என்ற மருத்துவர்கள் கூறியதால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என தெரிவித்தார் தங்களது சகோதரி உயிர் இழப்பிற்கு பெரியகுளம் மருத்துவமனை தான் காரணம் என்று புகார் தெரிவித்தார். தவறான சிகிச்சை மேற்கொண்டு தனது சகோதரி உயிருக்கு காரணமான பெரியகுளம் மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.