ரூ 1 லட்சம் கோடி மதிப்பீட்டில் சாலை- மேம்பால வசதி அடிக்கல் நாட்டு விழா! அரியானாவில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னரே சாலை போக்குவரத்து விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் மிகவும் அதீத கவனம் செலுத்தியது. காரணம் ஒரு நாட்டின் வளர்ச்சிப் போக்கு என்பது அந்நாட்டில் உள்ள சாலை வசதி கட்டமைப்பைப் பொருத்து அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை வல்லரசாக்கும் கனவோடு பயணிக்கிற மத்திய ஆளும் கட்சி தற்போது சுமார் ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 114 சாலை மற்றும் மேம்பால திட்டப் பணிகளுக்கு பாரதப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஹரியானா மாநிலத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் 13 மாநிலங்களின் திட்டப் பணிகளை பாரத பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இந்த சிறப்பு நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பலரும் விழா கோலத்துடன் வரவேற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.3260 கோடி மதிப்பீட்டில் சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் மார்க்கம், தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் மார்க்கம், கோவையில் இருந்து சிதம்பரம் மற்றும் நாகப்பட்டினம், திருச்சி மார்க்கம் , கடலூரில் இருந்து விருத்தாச்சலம் மார்க்கம், மதுரை அச்சம்பத்தில் இருந்து விராட்டிபத்து மார்க்கம், விழுப்புரத்தில் இருந்து புதுவை மற்றும் நாகப்பட்டினம் மார்க்கம் என்று சாலை மற்றும் மேம்பால பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற காணொளி காட்சி விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அங்கம் வகிக்கும் வீரேந்திர சாமியார் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.